Wednesday 19 March 2014



சில மாதங்களுக்கு முன் இங்குள்ள மால் ஒன்றில் திரைப்படம் பார்க்கப் போயிருந்தோம்.

‘மாம், பாப்கார்ன்?’

‘சரி’ என்றேன்.

மெகா சைஸ் பாக்கெட். ‘இவ்வளவு எப்படிடா சாப்பிடறது?’

‘சும்மா சாப்பிடும்மா. காரன் லோ காலரி. உடம்புக்கும் நல்லது’

விலை என்னவோ என்று மனதிற்கு நினைத்துக் கொண்டேன். கேட்டால் கோபிப்பான் மகன்.

பக்கத்திலிருந்தவர் சொன்னார் தன் மனைவியிடம்: ‘ஒரு பெரிய பாக்கெட் நூறு ரூபா’. ரெண்டுபேரும் ஷேர் பண்ணிக்காலாம், ஓகே?’

எனக்கு மனதுக்குள் ‘திக்’. நூறு ரூபாயா? இந்த விலையில் கிலோ கணக்கில் சோளம் வாங்கி வீட்டிலேயே பாப்கார்ன் செய்யலாமே!

‘இதுல இருக்குற ருசி வருமா, நீ வீட்டுல பண்ணினா?’ என் மனதைப் படித்தாற்போல என் மகன் கேட்டான்.

‘இதுல ஏதோ போடுவான் போல’ என்றேன்.

‘அதையெல்லாம் இப்ப நினைக்காதே. பாப்கார்ன் தின்று கொண்டே படத்தைப் பார்’ என்று அந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தான் அவன்.

கொஞ்ச நாளில் மறந்தும் விட்டேன்.

போனவாரம் ஒரு மின்னஞ்சல். பாப்கார்ன் பற்றிய எச்சரிக்கையைத் தாங்கி வந்தது. படிக்கும்போதே ‘பக்,பக்’ என்றது.

இதோ உங்களுக்கும்:

 நுரையீரலுக்கு வேட்டு வைக்கும் பாப்கார்ன் !!

மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர் ஆகட்டும்…மெகா ஷாப்பிங் மால்கள் ஆகட்டும்…

நிரம்பி வழிகிற பெரிய்ய்ய்ய்ய்ய பாப்கார்ன் பாக்கெட்டுடன் வலம் வருவது குட்டீஸ், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லாருக்கும் இன்று ஒரு ஃபேஷன். பாக்கெட் 100 ரூபாய் என்றாலும் வாங்கத் தயங்குவதில்லை.

அதன் மணமும் சுவையும் ஒரு காரணம் என்றால், ‘சோளப்பொரிதானே… உடம்புக்கு ரொம்ப நல்லது’ என்கிற நினைப்பு இன்னொரு காரணம்.

‘நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குது’ என்பது போல இதன் பின்னே நிறைய பிரச்னைகள்!

சோளம் உடலுக்கு நல்லதுதான்.

நார்ச்சத்து நிறைந்ததுதான்.

கலோரி குறைவான, ஆரோக்கியமான தீனிதான்…

சந்தேகமே இல்லை.

ஒரு கப் பாப்கார்னில் இருப்பது வெறும் முப்பதே கலோரிகள்…

வைட்டமின் பி1, பி5, சி, பாஸ்பரஸ், மாங்கனீசு என போனஸாக ஏகப்பட்ட சத்துகள்! இதெல்லாம் இயற்கையான முறையில் சோளத்தைப் பொரித்து சாப்பிடுகிற வரையில் மட்டுமே!

கடைகளிலும் தியேட்டர்களிலும் மிஷின் வைத்துப் பொரித்துக் கொடுக்கிற பாப்கார்ன், வீட்டிலேயே உடனடியாக தயாரிக்கக்கூடிய இன்ஸ்டன்ட் பாப்கார்ன், மைக்ரோவேவ் பாப்கார்ன் போன்ற எல்லாம் இதற்கு விதிவிலக்கு.

100 கிராம் அளவுள்ள இன்ஸ்டன்ட் பாப்கார்ன் பாக்கெட்டை பொரித்தால் கிடைப்பது, 510 கலோரிகள்… 55 கிராம் கார்போஹைட்ரோட், 58 கிராம் கொழுப்பு அமிலங்கள், 10 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் புரதச்சத்து… அவ்வளவுதான்!

சோளத்தைப் பொறுத்தவரை கடலை வறுக்கிற மாதிரி அப்படியே பொரித்தால், மணமோ, சுவையோ இருப்பதில்லை.

அதனால்தான் எண்ணெய், வெண்ணெய், மசாலா சேர்த்துப் பொரித்து விற்பனை செய்கிற கடை அயிட்டங்களுக்கும், இன்ஸ்டன்ட் பாக்கெட்களுக்கும் அத்தனை மவுசு.

இவற்றில் கொழுப்பும் கலோரியும் அதிகம் என்கிறபோதே, பாப்கார்ன் ஆரோக்ய உணவு என்கிற கருத்து உடைபட்டுப் போகிறது.

இன்ஸ்டன்ட் பாப்கார்ன் பாக்கெட்களை தவிர்க்கச் சொல்கிற அறிவுரைகள் ஒரு பக்கம் தொடர, மைக்ரோவேவ் பாப்கார்ன் பாக்கெட்கள் இன்னும் ஆபத்தானவை என பீதியைக் கிளப்புகின்றன லேட்டஸ்ட் ஆராய்ச்சிகள்.

இன்ஸ்டன்ட் பாப்கார்னிலேயே மைக்ரோவேவில் செய்யவென பிரத்யேக பாக்கெட்கள் கிடைக்கின்றன.

தட்டையாகக் காட்சியளிக்கிற அந்த பாக்கெட்டை அப்படியே மைக்ரோவேவில் வைத்தால், சில நொடிகளில் உள்ளே உள்ள சோளப்பொரிகள் பொரிந்து, பாக்கெட் பூரித்து உப்பிப் பெரிதாகும்.

பாப்கார்ன் பொரிகிறபோது அதிலிருந்து கிளம்புகிற வெண்ணெய் வாசம், யாரையும் மயங்க வைக்கும்.

அந்த மயக்கத்துக்குக் காரணமான ‘டைஅசிட்டைல்’ ரசாயனம்தான் பாப்கார்ன் பாக்கெட்களில் ஒளிந்திருக்கிற எமன் என்பது பலருக்கும் தெரியாது!

‘‘மைக்ரோவேவ் பாப்கார்ன் பாக்கெட்டில் மட்டுமில்லாம, குளிர்பானங்கள் உள்ளிட்ட நிறைய உணவுப் பொருட்கள்ல ‘டைஅசிட்டைல்’ சேர்க்கப்படுது.

இது மஞ்சள் நிறத்துல பவுடராகவோ, திரவ வடிவத்துலயோ இருக்கும். மார்ஜரின் மற்றும் எண்ணெய் உணவுத் தயாரிப்பாளர்கள், இதை உபயோகப்படுத்தி, சம்பந்தப்பட்ட உணவுக்கு செயற்கையான வெண்ணெய் மணத்தையும் சுவையையும் கொண்டு வர்றாங்க.

அதை சேர்க்காத பட்சத்துல, அந்த உணவுகள் ருசிக்கிறதில்லை. மேல சொன்ன செயற்கை வெண்ணெய் ருசிக்கான பொருளைத் தயாரிக்கிற தொழிற்சாலைகள்லயும், மைக்ரோவேவ் பாப்கார்ன் தயாரிப்புத் தொழிற்சாலைகள்லயும் வேலை பார்க்கிறவங்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படறது நிரூபணமாயிருக்கு.

மைக்ரோவேவ் பாப்கார்னை அடிக்கடி சாப்பிடறவங்களும் இதுக்கு விதிவிலக்கில்லை.

டை அசிட்டைலை தொடர்ந்து சுவாசிக்கிறதோட விளைவுதான் இது’’ என அதிர வைக்கிறார் ஆராய்ச்சியாளர் ராதாகிருஷ்ணன்.

டைஅசிட்டைல் கலக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை, குறிப்பாக சூடுபடுத்தி உண்ணக் கூடியவற்றைத் தவிர்ப்பதே பொதுமக்களுக்கான ஆரோக்ய அறிவுரை என்கிறார் இவர்.

‘‘சுவையும் மணமும் குறைவா இருந்தாலும் வீட்லயே சாதாரண முறையில் தயாரிக்கக்கூடிய பாப்கார்னே பாதுகாப்பானது.

மெகா சைஸ் பாக்கெட்ல விற்பனையாகிற பாப்கார்ன் பாக்கெட்டுகளோட ‘கமகம’ வாசனை வேற ஒண்ணுமில்லை.

பிரச்னையை ‘வா வா’ன்னு கூப்பிடற டைஅசிட்டைலேதான்…’’ என எச்சரிக்கிறார் அவர்.

படித்தவுடன் இனிமேல் வெளியே பாப்கார்ன் வாங்கி சாப்பிடவே கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன், நீங்க?

0 comments:

Post a Comment

காப்பகம்

என்னைப் பற்றி..

பிரபலமான இடுகைகள்