Monday, 24 March 2014



பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமோழி. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத்  தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும், உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது.


இது காரமும் மணமும் உடையது. உணவைச்  செரிக்க வைப்பது. விட்டு விட்டு வருகின்ற காய்ச்சலை  நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை  யனைத்தையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.


தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு  தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன்  தரும்.


 மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி  நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வாந்தி பேதி நிற்கும்.


பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகு இலை, தழுதாழை இலை, நொச்சி இலை  இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் நன்கு கழுக  ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சி,  தணண்ணீர் சூடானதும் சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடம் மிட நல்ல பலன் கிடைக்கும்.


சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை முடி புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு  மூன்றையும் அரைத்து முடி புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும். மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும்,  மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும், சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.


உலர் திராட்சையின் மகிமைதினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் .


சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் .


மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ் மிஸ்) அது.


 புகை பிடிப்பவர்களை தடுக்கும் அறுமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது,


மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்து கிறது,


 இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை,


இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி...


குழந்தைகள் சாப்பிடும் முக்கிய உணவு வகைகளில் பாலுக்கு அடுத்தபடியாக பிஸ்கெட் முக்கிய இடத்தை பிடிக்கிறது. மேலும் பெரியவர்களும் சாப்பாட்டுக்கு மாற்று உணவாக பிஸ்கெட்டுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். பிஸ்கெட் சாப்பிட்டால் உடல் நலத்துக்கு நல்லது. குழந்தைகள் உயரமாக வளருவார்கள் என விளம்பரப்படுத்தப்படுகிறது.

அது உண்மை இல்லை. பிஸ்கெட்டில் உடல் நலத்துக்கான கேடுகள் மறைந்து இருப்பதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘கான்சர்ட்’ என்ற நிறுவனம் சமீபத்தில் 34 பிரபல நிறுவனங்களின் பிஸ்கெட்டுகள் மற்றும் 25 நிறுவனங்கள் தயாரிக்கும் ஊறுகாய் போன்றவற்றை சேகரித்து ஆய்வு நடத்தியது. அவற்றில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் விதிகளின்படி பிஸ்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதா? இந்திய தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ள கொழுப்பு, புரோட்டீன், சர்க்கரை மற்றும் அமில அளவு சரியான அளவில் உள்ளதா? என ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு, ஆந்திரபிர தேசம், கேரளா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடந்த 7 மாதங்களாக பிஸ்கெட்டுகள் பரிசோதனை செய்யப்பட்டன.

இந்த ஆய்வு குறித்து கான்சர்ட் நிறுவனத்தின் இயக்குனர் சந்தனராஜன் கூறியதாவது:–

கிழங்குமாவு, கிரீம், உப்பு, பால் மற்றும் பேக்கரியில் இருந்து தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இவற்றில் பெரும்பாலான அளவு சர்க்கரை உள்ளது. மேலும் அவை பல மாதங்கள் கெட்டுப் போகாமல் இருக்க உடலுக்கு தீமை விளைவிக்கும் ரசாயன கலவைகள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால் பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகளில் ரசாயன கலவை குறைவாக உள்ளது. எனவே, பிஸ்கெட்டுகள் சாப்பிடுவதன் மூலம் உடலில் சக்தி, தெம்பு ஏற்படலாம்.

மாறாக உடலில் சத்துகள் உருவாகாது. பெரும்பாலான பிஸ்கெட்டுகளில் நார்ச்சத்து, தேன், கால்சியம் போன்றவை இல்லை. ஆனால், பிஸ்கெட் உணவுக்கு மாற்றானது. சுறுசுறுப்பு கொடுக்க கூடியது. பால், தேன் கலந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்கின்றன.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகின்றனர். புகையிலை பொருட்களை பயன் படுத்துவதால் மட்டும் புற்று நோய் வராது. நாம் சாப்பிடும் உணவு பொருட்களாலும் 30 சதவீதம் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

‘‘எலுமிச்சை, மாங்காய், காய்கறி கலவை மற்றும் மீன்’’ ஊறுகாய் வகைகள் பரிசோதனை செய்யப்பட்டன. பெரும்பாலான ஊறுகாய்களில் சோடியம் அதிக அளவில் உள்ளது. பென்ஷோயிக் அமிலமும் அதிக அளவில் சேர்க்கப் பட்டுள்ளது.

இனிப்பு வகை ஊறுகாய்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. இது நுகர்வோருக்கு இருதய நோய்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும். அதிக உப்பு சத்து சேர்ப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்த தகவலை இந்திய நுகர்வோர் சங்க தலைவர் ராஜன் தெரிவித்துள்ளார்.


முத்தம் என்பது அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம் மட்டுமல்ல, அது ஆயுளையும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. முத்தத்தைப் பற்றிய ஆராய்ச்சிமுடிவுகள் தினம் தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதோ புதிய ஆய்வு முடிவு ஒன்றின் சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்களேன்.


திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பின்பும் முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா? என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது முத்தத்தை முறையாக பகிர்ந்து கொள்ளும்போது அது மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டது.


இங்கிலாந்தில் இளம் ஜோடியினர் வாரத்துக்கு 11 முறை முத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தம் மிகவும் அழுத்தமானதாகவும், அதிக நேரம் கொண்டதாகவும் இருக்கிறது. இளஞ்ஜோடியினர் 5 நிமிடங்கள் வரை முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர்.


அந்நாட்டில் திருமணமானவர்களில் 5ல் ஒருவர் வாரத்தில் ஒருமுறை கூட முத்தத்தை பகிர்ந்து கொள்வது கிடையாது. எப்போதாவது அவர்கள் முத்தத்தை பகிர்ந்து கொண்டாலும் அது அழுத்தமாகவோ, நீண்ட நேரம் கொண்டதாகவோ இருப்பதில்லை என்று கண்டறியப்பட்டது. அவர்கள் அதிகபட்சமாக 5 வினாடிகள் முத்தம் கொடுப்பதே பெரிய விஷயமாக உள்ளது. (திருமணத்திற்கு முன்பு அதிகம் முத்தம் கொடுத்து போரடித்திருக்கும்)


முத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் நன்மை குறித்து தெரிவிக்கவும் பள்ளி குழந்தைகளிடையே முத்தம் கொடுக்கும் திறமையை வளர்க்க, தேசிய பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக முத்தத்தை வைக்கலாம் என்று இங்கிலாந்தின் இதய பாதுகாப்பு பவுண்டேசன் பரிந்துரைத்துள்ளது.


நம்ம ஊரில் பள்ளி மாணவர்கள் முத்தம் பற்றி பேசினாலே அடி பின்னிவிடுவார்கள். இங்கிலாந்தில் முத்தம் குறித்த பாடத்திட்டமே கொண்டுவரப்போகிறார்களாம். இது எப்படி இருக்கு.


இதய நாள் நோய்கள்(கரோனரி ஆர்டரி டீசீஸ்) பற்றிய தகவல்கள்:-

பிறவியில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாகவும், இதய வால்வுகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும், இதய தசைகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும் இதயத்தின் கீழ் அறையில் இடது புறத்தில் இருந்து புறப்படும் பிரதான நாளங்கள் மற்றும் அதன் கிளை நாளங்களில் உள்ள நோய்கள் மூலமாகவும் இதய நோய்கள் ஏற்படலாம். இதயத்துக்கு இரத்தம் வழங்கும் நாளங்களில் ஏற்படும் நோய்களாலும் இதய நோய்கள் ஏற்படுவதுண்டு.
பொதுமக்கள் பெரிதும் அஞ்சுகிற பரவலான நோய் இதய நாள நோயாகும் (கரோனரி ஆர்டரி டீசீஸ்). இந்த நாளங்கள் தான் இதயத்துக்கு இரத்தம் வழங்குகின்றன.

பொதுவாக இந்த இரத்த நாளங்களின் உள் பகுதியில் கொழுப்பு படிவங்கள் உருவாகிற காரணத்தால் இரத்த நாளங்கள் சுருங்கி இரத்த ஓட்டத்தை தடை செய்வதால் இந்த நோய் ஏற்படுகிறது. இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்ததால் போதுமான அளவு இரத்தம் ஓட்டம் ஏற்படாமல் போய்விடுகிறது.

அடுத்து ஆஞ்சினா பெக்டோரிஸ் அதாவது மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்படுதல், இத்தகைய வலி சற்று ஓய்வு எடுத்தவுடன் போய்விடும். சில நேரங்களில் தாடை எலும்பு, கைகளுக்கும் பரவும். ஆஞ்சினா பெக்டோரிஸ் என்ற இந்த நோய், இரத்த நாளங்கள் மூலம் வழங்கப்படும் இரத்தத்தின் அளவு குறையும் நேரத்தில் ஏற்படும்.

அடுத்து நிலையற்ற ஆஞ்சினா என்ற மூச்சுத் திணறல் உணர்வு அல்லது மூச்சுத் திணறல் வலி, 4 வதாக மாரடைப்பு, 5 வதாக திடீரென ஏற்படும் மாரடைப்பால் ஏற்படும் இதய ஓட்டம் தடைபடுதல் மற்றும் மரணம்.

இந்த நோய்களுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் புகை பிடித்தல், நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, பரம்பரையாக இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பது, மன அழுத்தம், மனக் கவலை சோர்வு, உடற் பயிற்சி இல்லாத நிலை, உடல் பருமன், வயது போன்ற சிலவற்றை கூறலாம்.

ஈ. சி. ஜி. யில் காணப்படும் மாற்றங்கள், ஸ்டிரெஸ் டெஸ்ட், ஹோல்டர் (24 மணி நேர ஈ. சி. ஜி) எக்கோ கார்டியோகிராபி, சி. டி. ஆஞ்சியோ (64 சிலைஸ்) போன்ற சோதனைகள் மூலம் இந்த நோய்களை கண்டறியலாம்.

அஞ்சினா பெக்டோரிஸ்

பொதுவாக இந்தப் பாதிப்பு மார்பின் நடுப்பகுதி, வயிற்றின் மேல் பகுதி, கழுத்து, முதுகு, தாடை எலும்பு மற்றும் கைகளில் வலியை ஏற்படுத்தும். மார்பின் கீழ் பகுதி மற்றும் வயிற்றின் மேல்பகுதியில் சற்று அசெளகரியம் ஏற்பட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாலோ அல்லது தண்ணீர் குடித்தவுடனோ போய் விட்டால் இது வாய்வு உபத்திரவம் என்று தவறாக முடிவு எடுத்துவிட்டு அப்படியே விட்டு விடுகிறார்கள்.

சில நேரங்களில் இந்த அறிகுறிகளோடு வியர்வை, சோர்வு, தலைசுற்றல், மூச்சுத் திணறல் போன்றவையும் ஏற்படக் கூடும். சிலருக்கு எந்த வலியோ, அசெளகரியமோ ஏற்படாமல் மூச்சுவிட சங்கடமோ அல்லது எரிச்சலோ மட்டும் ஏறபடக்கூடும்.

இத்தகைய அசெளகரியம், எரிச்சல், பாரமான உணர்வு, வலி, அதிக வியர்வை, தலைசுற்றல் போன்றவற்றால் மூச்சுவிட சங்கடம் போன்றவை சில நிமிடங்களுக்கு ஏற்பட்டு சற்று ஓய்வுக்குப் பிறகு, அல்லது உணவுக்குப் பிறகு போய்விட்டால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய, சிகிச்சை பெறவேண்டிய அவசர அவசிய நிலையாகும்.

மையோ கார்டியல் இன்பங்க்ஷன்

(மாரடைப்பு)
இதுவரையில் கூறப்பட்ட அறிகுறிகள் அரைமணி நேரத்துக்கு மேல் நீடித்தால் அது மாரடைப்பாக இருக்கக்கூடும். 30 சதவீத இத்தகைய நோயாளிகளுக்கு குறிப்பாக நீரிழிவு நோய் உள்ள 50 சதவீதம் பேருக்கு இதுபோன்ற அறிகுறிகளே இல்லாமல் சில நேரங்களில் பலவீனம், அதிக வியர்வை மட்டும் கொண்டு மாரடைப்பு ஏற்படக்கூடும்.

எவ்வளவு விரைவாக ஆஸ்பத்திரிக்கு சென்று, எவ்வளவு விரைவாக சிகிச்சை தொடங்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ரத்த நாளங்களில் அடைப்புகள் அதிகமாக இருந்து இதய ஓட்டம் நின்றுவிட்டால் திடீர் மரணம் ஏற்படக் கூடும்.

ஏற்கனவே கூறப்பட்ட பரிசோதனைக ளோடு ‘கரோனரி ஆஞ்சியோகிராபி டிஜிட்டல்’ என்ற சோதனை தங்க தர சோதனை என்று அழைக்கப்படும் ஆஞ்சியோ சோதனையாகும். இது மிகவும் பாதுகாப்பான சோதனையாகும்.

இதய நோயை முற்றிலுமாக குணமாக்கிவிட முடியாது. பிரதானமான மற்றும் முக்கியமான சிகிச்சை என்னவென்றால் வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பது தான்.

இத்தகைய நோய்களுக்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. பெரும் பான்மையான நோயாளிகளுக்கு மருந்துகளே நீண்ட காலத்துக்கு நல்ல பலனை தரும்.

இந்த நாளங்களில் ஒன்று அல்லது 2 கடுமையான அடைப்புகள் இருந்தால் ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் அதை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ரத்த குழாய்கள் சுருங்காமல் இருக்க ஸ்டென்ட் என்று சொல்லப்படும் சிறிய டியூப்பை டாக்டர்கள் பொருத்தி விடுவார்கள்.

இது நல்ல பலனை தருகிறது. இதுதவிர இருதய ஆபரேஷன் அதாவது சிஏபிஜி ஆபரேஷன் செய்து கொள்ளாம். இது நீண்ட காலத்துக்கு மிக சிறப்பான பலனை தரும். இதன் மூலம் மரண அபாயம் மற்றும் பல சிக்கல்கள் நீக்கப்படுகின்றன.

தடுக்கும் வழிகள் :

இந்த நோய் வராமல் தடுப்பது நமது கையில்தான் இருக்கிறது. நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக இதய நோய்க்கான மருந்துகள் சாப்பிடுபவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டு ஸ்டென்ட் பொருத்தி இருப்பவர்கள், இதய ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள ‘ரிqனிu.

இந்த நோய் இல்லாதவர்கள், நோய்க்கான அறிகுறி இல்லாதவர்களும் இந்த நோய் தங்களுக்கு வந்துவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள முடியும். புகை பிடிக்காமல் இருப்பது, உடல் பருமன் இல்லாமல் பார்த்து கொள்வது இரத்தக் கொதிப்பு, நீரிழிவு அதிக கொழுப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் உணவு முறை மற்றும் உடற்பயிற்சி யால் மட்டுமே முடியும். சிலருக்கு இந்த நோய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது வருவதற்கான அறிகுறிகள் இருக்கலாம். இத்தகையவர்கள் உடனடியாக புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். உடல் எடையை குறைக்க வேண்டும். ரத்தக் கொதிப்பு, நீரிழிவை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான மருந்துகளை சாப்பிட வேண்டும்.

உணவு முறை

நமது உணவு வகைகள் நிச்சயமாக இதய நோய்களைத் தடுக்க பெரும் உதவிகரமாக இருக்கும். குறைந்த கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள், அதிக அளவு பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் இதய சிகிச்சை டாக்டர், உணவு வகை நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று அதற்கேற்ப நமது உணவு வகைகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். மிகவும் எளிமையான வழிமுறை என்னவென்றால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு எண்ணையை அது எந்த எண்ணையாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். எண்ணையை பயன்படுத்தி சமைத்த பொருட்களை தவிர்க்க வேண்டும்.

இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ரிபைன்டு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். பழ வகைகள், காய்கறிகள் சாப்பிடும் அளவை அதிகரிக்க வேண்டும்.

உடற் பயிற்சி

நடைப் பயிற்சி தான் உடற் பயிற்சியில் மிக சிறந்ததாகும். சைக்கிள் ஓட்டுவதும் சிறந்தது. தினமும் காலையிலோ, மதியமோ, மாலையிலோ வெறும் வயிற்றில் இடைவிடாமல் 30 முதல் 45 நிமிடங்கள் வாரத்துக்கு குறைந்தது 5 நாட்களாவது நடக்க வேண்டும்.

இதய நோயாளிகள் தங்கள் உடற் பயிற்சி முறையை டாக்டரின் ஆலோசனை பெற்று வகுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும், டாக்டர் பரிந்துரை செய்தால் இதய நாள நோயாளிகள் யோகா செய்வதும் பலன் அளிக்கும்.
வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!



வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.

மேல சொன்ன மருந்தைச் சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்களில் எது முடியுதோ அதைச் செய்ய சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிடும்.

5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.

தழுதாளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை இளஞ்சூடாக ஆறவிட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல் தினமும் ஊற்ற வேண்டும்.

வாதநாராயணன் இலையும் இதுமாதிரிக் கோளாறுகளைச் சரி பண்ணும். வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும்.

சுளுக்கு/வாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருந்து!

அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணி விதைகளை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில் ஊற வைக்கணும். காலையில் ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.

பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்தில், இளஞ்சூட்டில் தினமும் இராத்திரி பத்துப் போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழிச்சுத் திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.

சுளுக்கு, அடிபட்ட வீக்கம் இந்த இரண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல் பூசி வந்தா நல்ல சுகம் கிடைக்கும்.


கண்களைச் சுண்டி இழுக்கும் வசிகரமான ஆரஞ்சு பழம், நம் தேகத்துக்கும் வசிகரத்தை அள்ளித் தரக்கூடியது. அவற்றில் சில.....

1. கண்கள் "ப்ளிச்" ஆக சில குறிப்புகள் இதோ.....

ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் "ப்ளிச்" ஆகிவிடும்.
தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

2. ஜொலி ஜொலிக்க...

தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை.

உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா - இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள்.

இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.

3. வடுக்கள் நீங்க...

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா? ஆரஞ்சு விழுது இருக்க கவலையேன்?

ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன்,சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை... இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.

இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.

4. கருமையை விரட்டியடிக்க....

சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்...

1 வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது - கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.

5. ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை...

தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிறது. ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை.

உலர்ந்த ஆரஞ்சு தோல் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம், பிஞ்சு கடுக்காய் - 10 கிராம், வால் மிளகு - 10 கிராம், பச்சை பயறு - கால் கிலோ... எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் இரு முறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள்.

அரிப்பு போவதுடன் சுத்தமும், வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும்.

6. ஆரஞ்சு ஃப்ருட் பேக்...

வெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு ஃப்ருட் பேக்.

ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

பிரபலமான இடுகைகள்