மனிதன் உட்பட உலகின் அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமாக வாழ இயற்கையால் படைக்கப்பட்டவை தான் செடிகள், கொடிகள், மரங்கள். இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பயன்பட்டுக்கொண்டு இருக்கிறது.
இவற்றில் மனிதனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவைதான் கற்ப மூலிகைகள்.
கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைப்பது. இதில் மூலிகைகள் பல உள்ளன. ஒவ்வொரு மூலிகைகளுக்கும் அதனதன் தன்மைப்படி தனித்தனி மருத்துவக் குணங்கள் உண்டு. இதில் கண்டங்கத்திரி ஒரு கற்ப மூலிகை. இதனுடைய மருத்துவப் பயன்கள் ஏராளம்.
கண்டங்கத்திரி படர்செடி வகையைச் சார்ந்தது. இது எல்லா இடங்களிலும் செழித்து வளரும் தன்மை கொண்டவை.
இதன் இலை, பூ, காய் பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. கார்ப்புச் சுவை கொண்ட இது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
காச சுவாசங் கதித்தஷய மந்தமனல்
வீசுசுரஞ் சன்னி விளைதோடம்-ஆசுறுங்கால்
இத்தரையு னிற்கா, எரிகாரஞ் சேர்க்கண்டங்
கத்திரியுண் டாமாகிற் காண்
-அகத்தியர் குணவாகடம்
பொருள் - கண்டங்கத்திரிக்கு காசம், சுவாசம், ஷயம், அக்கினி மந்தம், சன்னி, வாதம், தோஷ நோய்கள், தீச்சுரம், வாதநோய், ரத்தசுத்தி போன்றவற்றைத் தடுக்கும் குணமுண்டு.
கண்டங்கத்திரியின் மருத்துவப் பயன்கள் சுவாச நோய்களுக்கு
இன்றைய புறச்சூழ்நிலை மாறுபாட்டால் உண்டான அசுத்தக் காற்றை சுவாசிக்கும்போது அவை உடலில் ஒவ்வாமையை உண்டுபண்ணி நுரையீரலைப் பாதிக்கிறது. மேலும் உடலுக்குத் தேவையான பிராண வாயுவை தடைசெய்கிறது. இதனால் மூச்சுக் குழல் தொண்டைப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. சளிபிடித்துக்கொள்ளுதல், மூக்கில் நீர் வடிதல், அதிகளவு தும்மல் மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகிறது.
சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கண்டங்கத்திரிக்கு உண்டு.
கண்டங்கத்திரியின் தன்மை பற்றி அகத்தியர் கூறும் கருத்து இதோ..
மாறியதோர் மண்டைச்சூலை
கூறியதோர் தொண்டைப்புண்
தீராத நாசிபீடம்
தலையில் நீர் கோர்த்தல், சூலை நீர் எனப்படும் கப நீர், பித்த நீர் இவற்றை சீராக்கி செயல்படுத்தி மாற்றவும், தொண்டையில் நீர்க்கட்டு, தொண்டை அடைப்புகள், மூக்கில் நீர் வடிதல், சளி உண்டாதல் போன்றவற்றிற்கும், மூச்சுத் திணறல், இருமல், ஈழை, இழுப்பு இவற்றிற்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது கண்டங்கத்திரி என அகத்தியர் பெருமான் கூறுகிறார்.
இன்றைய சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் முதல் பெரிய அளவில் வியாபார நோக்கோடு சித்த, ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் மருந்துசெய் நிறுவனங்கள் வரை சித்த, ஆயுர்வேத மருந்துகளில் கண்டங்கத்திரியை உபயோகிக்கின்றனர்.
பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் குணமுள்ளவை. அந்த வகையில் ஒத்த குணமுடைய மூலிகைகளான கண்டங்கத்திரி, இண்டு, இசங்கு, தூதுவளை சம அளவு எடுத்து அதனுடன் ஆடாதோடை சேர்த்து இடித்து நீரில் கொதிக்கவைத்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் மேற்கண்ட சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் குணமாகும்
மாற்றுமுறை
கண்டங்கத்திரி இலை, இண்டு இலை, இசங்கு இலை, தூதுவளை இலை, ஆடாதோடை இலை இவற்றை நிழலில் காயவைத்து சம அளவு எடுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் இருவேளை 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரலாம்.
கண்டங்கத்திரி கஷாயம்
இண்டு, இசங்கு, கண்டங்கத்திரி, ஆடாதோடை, தூதுவளை, துளசி இலை, வால்மிளகு, சுக்கு, திப்பிலி இவற்றில் தலா 5 கிராம் அளவு எடுத்து இடித்து பொடித்து இரண்டாகப் பிரித்து காலையில் 1 பங்கை 2 கப் நீரில் கொதிக்க வைத்து 1 கப்பாக வற்ற காய்ச்சி வடிகட்டி அருந்தவேண்டும். அவ்வாறே மற்றொரு பங்கை மாலையில் செய்து அருந்தவேண்டும். இது தீராத ஆஸ்துமா, வலிப்பு நோய் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.
கண்டங்கத்திரி காது, மூக்கு, தொண்டை, வயிற்றுப்பகுதி மூதலிய இடங்களில் உள்ள தேவையற்ற சளியைப் போக்குகிறது.
கண்டங்கத்திரிக்கு ரத்தத்தில் சளியையும், ரத்தக் குழாய்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்புகளையும் நீக்கும் தன்மை உண்டு. அதேபோல் மார்புச் சளியை நீக்கி குரல்வளையில் தேங்கிநிற்கும் சளியை நீக்கி சுவாசத்தை சீராக்கும்.
கண்டங்கத்திரி இலையின் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் பூசி வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். தலைவலி, சரும பாதிப்பு இவைகளுக்கு மேல்பூச்சாகப் பூசினால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
கண்டங்கத்திரி எல்லா பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. இதனை முறைப்படி பயன்படுத்தி நாமும் நோயின்றி வாழ்வோம்.
0 comments:
Post a Comment