பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையே, இளம் வயதிலே, வயது முதிர்வு பிரச்னை வேகமாகப் பரவி வருகிறது. மேலும், அழகு சாதனப் பொருட்களுக்கு அடிமையாவதன் மூலம், முடி நரைத்தல் பிரச்னையும் தோன்றுகின்றது. இதிலிருந்து விடுபடவும், இப்பிரச்னைகளுக்கான காரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
இளம் வயதில் வயது முதிர்வு பிரச்னை தோன்றுவதற்கான காரணங்கள்:-
உடலில் வாதம், பித்தம் அதிகரிப்பதன் காரணமாக இளம் வயது முதிர்வு பிரச்னை வருகிறதென ஆயுர்வேதம் கூறுகிறது. உலர்ந்து போன உணவு, காரம், உப்பு, புளிப்பு மற்றும் வறுக்கப்பட்ட உணவுகள், முளை விட்ட தானியங்கள், புதிய தானியங்கள், சோடியம் பை கார்பனேட் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு, பசியில்லாத போது அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல் மற்றும் நொதிக்க வைக்கப்பட்ட பானங்களைக் குடித்தல், பகலில் தூங்குதல், முறையற்ற அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் மற்றும் மனரீதியாக மன அழுத்தம், கோபப்படுதல் போன்றவை இந்த தோஷ காரணிகளை அதிகரித்து, இளம் வயது முதிர்வு பிரச்னை ஏற்படுகிறது.
வயது முதிர்வு தோன்றுவதற்கான அறிகுறிகள்:
முடி நரைத்தல் மற்றும் வறண்டுபோன முடி, முடி உதிர்தல், வாடிப்போன முகம், கண்களைச் சுற்றி கரு வளையம், தளர்ச்சியான தசைகள், உடலில் தேவை இல்லாமல் கொழுப்பு சேர்தல், மூட்டு வலி, முறையற்ற மாதவிடாய், சுறுசுறுப்பின்மை, அதிக இதயத் துடிப்பு மற்றும் வேகமாக மூச்சிழுக்கும் பிரச்னை, நினைவுத் திறன் தடைப்படுதல், புரிந்து கொள்ளும் தன்மை குறைதல் மற்றும் கவனக்குறைவு ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகள்.
தினசரி தவறாமல் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
அதிகாலையில் விழித்தல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் சிறுநீர் கழித்தலை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். முகம் மிருதுத்தன்மை பெறுவதற்கும், எண்ணெய் வடிதல் மற்றும் அழுக்கு சேர்தலை தவிர்க்கவும், எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். தலை, காது மற்றும் பாதங்களில், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பூசுவதன் மூலம், குளிர்ச்சி தன்மையைப் பெறலாம். இவை முடி கொட்டுதல் மற்றும் நரைத்தலை தடுக்கிறது.
உணவில் இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம் மற்றும் உவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் நடுநிலையுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், கோதுமை, கறுப்பு கொள்ளு, தேங்காய், வேர்க் கடலை, வெல்லம், நெய் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது, சருமத்தில் ஈரத் தன்மையை தக்க வைத்து, சருமம் உலர்ந்து போதல் மற்றும் தடிமனாக மாறுவதைத் தடுக்கிறது. பசு நெய், தசை மற்றும் சருமத்திற்கு நல்லது.
இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்டபின், குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்குப் பின், தூங்கச் செல்ல வேண்டும். நள்ளிரவுக்கு பின் தூங்கச் செல்வதால், கண்களுக்கு கீழே கரு வளையம், வீக்கம் உண்டாகிறது. இதைத் தவிர்க்க, குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
சருமம் ஈரத் தன்மையுடன் இருக்க, போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன், எண்ணெய் மிகுந்த, காரமான, பழைய உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், தினசரி ஒன்றரை மணி நேரம், வேகமாக நடப்பது அவசியம்; இதனால், வியர்வை வெளியேறி நச்சுப் பொருள் நீக்கப்படுகின்றன.
நெல்லிக்காய், எலும்பு, தசை மற்றும் உடல் உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி, மூன்று வகையான தோஷ காரணிகளை நடுநிலையுடன் வைத்து, உடல் உறுப்புகளுக்கு புத்துணர்ச்சியை கொடுக் கிறது. பழங்கள் சாப்பிடுவதும் பலன் அளிக்கும்.
காய்ச்சாத பசும் பாலுடன், ஜாதிக்காய் பவுடர் சேர்த்து, களிம்பு போல செய்து, கண்களுக்கு கீழே தடவி, காய்ந்தவுடன் கழுவினால், கண்களுக்கு கீழே காணப்படும் கரு வளையம் நீங்குவதுடன், முகம் வறண்டு போவதையும் தடுக்கலாம்.
தயிருடன், சுத்தமான மா இலை சேர்த்து, களிம்பாக செய்து முகத்தில் பூசுவதால், கறுப்பு கோடு, முகப்பரு தழும்பு நீங்குகிறது. மா இலைகள் உவர்ப்பு தன்மை கொண்டிருப்பதால், அவை முகத்திலுள்ள நுண் துளைகளை சுருங்கச் செய்து, சருமத்தைச் சுத்தமாக வைக்கிறது.
0 comments:
Post a Comment