Thursday, 6 March 2014



அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ள ஃப்ரிட்ஜ்களில் கொத்தமல்லி இலைகளுக்கு என்று தனி இடம் உண்டு. இந்த கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும். கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது. கொத்தமல்லி இலைகளில் மிளகில் இருப்பது போன்ற சிறிது காரமான சுவை இருப்பதால், இது பல உணவு வகைகளுக்கும் வித்தியாசமான வாசனையைக் கொடுத்து, உணவின் சுவையைக் கூட்டுகிறது. குறிப்பாக இதன் விலை மிக மிகக் குறைவு. ஆனால் இதன் மருத்துவப் பயன்களைப் பார்க்கும் போது, விலை மதிப்பில்லாததாகக் கருதப்படுகிறது. இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி, நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது. இப்போது அந்த கொத்தமல்லி இலைகளின் மருத்துவப் பயன்களைப் பார்ப்போம்.

கண் நோய்கள்

நல்ல புதிய கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மாகுலர் டிஜெனெரேசன் (macular degeneration) எனப்படும் கண் நோய், விழி வெண்படல அழற்சி (conjunctivitis) எனப்படும் மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றைக் குணப்படுத்துதலிலும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை இதப்படுத்தவும் உதவுகின்றன. அதற்கு சிறிது கொத்தமல்லி இலைகளை நன்கு அரைத்து, தண்ணீரில் கொதிக்கவிட்டு, அதனை மெல்லிய சுத்தமான துணியினால் வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த நீரின் சில சொட்டுக்களை கண்களில் விடுவதால், கண் எரிச்சல், கண் உறுத்தல், கண் வலி ஆகியவை குணப்படுவதோடு, கண்களில் நீர் வடிதலும் நிற்கும்.


மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்

மூக்கிலிருந்து ரத்தம் வடிகிறதா? அப்படியெனில் 20 கிராம் புதிய கொத்தமல்லி இலைகளை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது கற்பூரம் சேர்த்து கசக்கிப் பிழிந்து சாறு எடுங்கள். இந்த சாற்றினை இரத்தம் வரும் நாசித்துவாரத்தில் சொட்டு சொட்டாக விடுங்கள். வடிகின்ற இரத்தம் உடனே நின்றுவிடும். கொத்தமல்லி இலைகளையும் கற்பூரத்தையும் சேர்த்த அரைத்துக் கொண்டு இக்கலவையை நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொண்டாலும், மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நின்றுவிடும். சிலசமயங்களில் இக்கலவையை முகர்ந்து பார்த்தாலே இரத்தம் வடிவது நிற்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


சரும நோய்கள்

கொத்தமல்லி இலைகளுக்கு பூஞ்சைகளை நீக்கும் சக்தியும், நச்சுக்களை நீக்கும் ஆற்றலும், தொற்றுக்களை நீக்கும் ஆற்றலும், ஆன்டி-செப்டிக் தன்மையும் உண்டு. சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. இதன் காரணமாக சில சரும நோய்களை நீக்குவதில் இது மிகவும் உதவிகரமாக உள்ளது. படை நோய் இருந்தால், கொத்தமல்லி இலைகளை அரைத்து ஜூஸாக்கிக் குடிக்கவோ அல்லது அரைத்து சருமத்தின் மீதோ தடவலாம். தோல் தடிப்பிற்கும், அரிப்பிற்கும், புதிய கொத்தமல்லி இலைகளை அரைத்துத் தேனுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக அலசிவிட்டால், சரும பிரச்சனைகள் குணமாகும்.


கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தி

கர்ப்பத்தின் தொடக்க காலங்களில் பெரும்பாலான பெண்களுக்கு தலைசுற்றலும், வாந்தியும் இருக்கும். இது மாதிரி நேரங்களில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, குளிர வைத்துக் குடித்து வர வேண்டும். இதனால் தலைச்சுற்றலும், வாந்தியும் குறையும்.

அம்மை

கொத்தமல்லி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்கிருமி எதிர்ப்புத் தன்மை, கிருமி நாசினித் தன்மை மற்றும் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன. இரும்புச்சத்தும், வைட்டமின் சி-யும் இதன் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, அம்மை நோயின் தீவிரத்தை குறைக்கின்றன. இதனால் அம்மை நோயினால் ஏற்படும் வலி குறையும்.


வாய்ப்புண்

கொத்தமல்லி இலையில் நிறைந்துள்ள வாசனை எண்ணெயான சிட்ரோநெல்லோல், சிறப்பான கிருமிநாசினித் தன்மை கொண்டுள்ளது. எனவே இது வாயிலுள்ள புண்களை ஆற்றுவதோடு, அது வராமலும் தடுக்கும். மேலும் சுவாசத்தை ஃப்ரெஷ் ஆக்குவதோடு, வாய்ப் புண்களை நன்கு குணப்படுத்தும் தன்மை கொண்டது.

கொழுப்புக்களை குறைக்கும்

கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுவதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த நாளங்களின் சுவர்களில் படியும் கொழுப்பை நன்கு குறைப்பதால், மாரடைப்பு வருவதை பெருமளவு குறைக்கிறது.


செரிமானத்தை அதிகரிக்கும்

கொத்தமல்லியில் மணம் நிறைந்த நறுமண எண்ணெய் இருப்பதால், பசியுண்டாக்கியாகச் செயல்பட்டு, வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் நொதிகளையும், சுரப்புக்களையும் அதிகமாக சுரக்க உதவுகிறது. எனவே உடலின் செரிமான சக்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு நன்கு உதவுகிறது. மேலும் பசியின்மையைப் போக்குவதிலும் பயன்படுகிறது.

0 comments:

Post a Comment

பிரபலமான இடுகைகள்