Saturday, 22 March 2014



'குழந்தை இல்லையா... இனி கவலை வேண்டாம்...'' என்று கூவி அழைக்கும் மருத்துவ நிகழ்ச்சிகள், பல தொலைக்காட்சிகளில் அரங்கேறிக் கொண்டுஇருக்கின்றன. பத்திரிகை முதல் இணையம் வரை இதற்கான விளம்பரங்களும் ஓயாமல் படபடத்தபடியே இருக்கின்றன.


உச்சகட்டமாக, 60 வயதைத் தாண்டிய பாட்டி கர்ப்பமாக இருப்பது போலவும், அவர் சாலையைக் கடந்து செல்கையில் பலரும் அதை ஏதோ ஒரு அதிசய நிகழ்வாகப் பார்ப்பது போலவும் காட்சிஅளிக்கும் விளம்பரப் பதாகைகள் பலரின் கவனத்தையும் ஈர்க்கின்றன.


       மாநகரங்கள்தான் என்றில்லை… தமிழகத்தின் சிறு நகரங்களில்கூட, டீக்கடை போல மலிந்து கிடக்கும் ‘கருத்தரிப்பு மையங்கள்’ செய்யும் மருத்துவத்தில், சில பெண்களுக்கு குழந்தைகள் கிடைக்கின்றன. பலருக்கு உயிர் இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இது, இந்த வகை மையங்களின் மீது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த ‘கருத்தரித்தல் மையங்களின்’ மருத்துவம் பற்றிய சீரியஸ் ஸ்கேன் ரிப்போர்ட் இது!
இயற்கை நிகழ்வை வலிந்து செயற்கையாக்கி..!


உடல்ரீதியாக சரியாக இருந்தும், சாதாரண சில காரணங்களால் கரு உருவாதல் தள்ளிப்போகும் தம்பதிகளைக்கூட, ‘பேசாம ட்ரீட்மென்டுக்குப் போயிடலாம்…’ என்று மருத்துவமனைக்குப் படையெடுக்க வைத்துவிட்டன குழந்தையின்மை சிகிச்சை பற்றிய நிகழ்ச்சிகளும், விளம்பரங்களும். திருமணமானவர்களின் எதிர்பார்ப்பு, குழந்தையே என்பதைக் கருத்தில்கொண்டு, ‘குழந்தையில்லை’ என்பதை பெருங்குறையாக மிகைப்படுத்தி காசு பார்க்க நினைத்து, குழந்தை பிறப்பை பற்றிய ஆலோசனைகளையே அச்சுறுத்தலாக்கி விடுகிறார்கள் சில மருத்துவர்கள்.

திருமணம் ஆனவுடன் இயற்கையாக உடலுறவு வைத்துக்கொள்ளும் தம்பதிக்கு, குழந்தைப் பிறப்பில் பெரும்பாலும் சிக்கல்கள் இருப்பதில்லை. அதேசமயம் சிலருக்கு சிறு அளவில் ஏற்படும் சிக்கல்களைக்கூட பூதாகாரமாய் சித்திரித்துப் பெரிதுபடுத்தும் மருத்துவமனைகளும் தற்போது பரவலாகப் பெருகிக்கொண்டு வருவது உண்மை. விளைவு, இயற்கையாகவே நிகழ வாய்ப்புள்ள குழந்தைப்பேறு எனும் அந்த அற்புத நிகழ்வுக்கு, தேவையில்லாமல் பணத்தையும் நேரத்தையும் செலவழித்து, ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொள் கிறார்கள் பலர்.


இப்படியெல்லாம்கூட நடக்கிறது!


சில மருத்துவமனைகள், குழந்தைப்பேறு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கும் ஒரு பெண்ணின் மாதவிலக்கை, அந்தப் பெண்ணுக்கே தெரியாமல் சில மாத்திரைகள் கொடுத்து தள்ளிப்போடுகிறார்கள். அப்படி மாதவிலக்கு தள்ளிப் போனதை கர்ப்பம் என பொய்யாக தகவல் அளிக்க, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வாழ்வின் பயனை அடைந்துவிட்ட நெகிழ்ச்சி.


பின்னர் சில தினங்களில் அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்படும்போது, அதை கருக்கலைந்ததாக சொல்லிவிடுகிறார்கள். இருந்தாலும், இதுவரை கரு உருவாகாமலேயே இருந்த தன் வயிற்றில், இந்த மருத்துவமனைக்கு வந்த பின் கரு உருவாக்கம் நிகழ்ந்ததையே (?) பெரும் நம்பிக்கையாகக் கொண்டு,


அவர்களின் நாடகம் அறியாமல் தொடர்ந்து அங்கேயே சிகிச்சையை (?) தொடரும் பரிதாபங்களும் நடக்கின்றன.


அதேமாதிரி விந்தணுவில் சிக்கல் இருக்கும் தம்பதியின் முறையான அனுமதியில்லாமல், தங்கள் மருத்துவமனைக்குப் பெயர் கிடைக்க வேண்டுமென்ற காரணத்தால், வேறு யாராவது ஒருவருடைய விந்தணுவை, ‘கணவனின் விந்தணு’ என பொய்யாகக் கூறி, அதை மனைவிக்கு புகுத்தி கருவுறச் செய்து காசு பார்க்கும் கீழ்த்தரமான மருத்துவமனைகள் இருப்பதாகவும், பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல்களை அள்ளித் தெளிக்கிறார்கள்.



‘குழந்தைப்பேறு என்பது சிக்கலான விஷயமா? அப்படி சிக்கல் இருக்கும்பட்சத்தில் அதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்தால் தான் தீர்வு கிடைக்குமா? குழந்தைப்பேறுக்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளின் ஆபத்து என்ன?’ என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளுடன் மருத்துவர்கள் சிலரை அணுகினோம்.


பெண்களைவிட, ஆண்களுக்கே பிரச்னை அதிகம்!


சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் பிரியதர்ஷினி, ”பொதுவாக குழந்தையின்மை என்ற பிரச்னை வரும்போது, காலங்காலமாக பெண்ணைத்தான் ‘மலடி’ என்று சொல்வார்கள். இப்போது குழந்தையின்மைக்கான காரணங்கள், பெண்ணைவிட ஆணுக்கே அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்ணுக்கு இருக்கும் குறைபாட்டைத் தீர்ப்பதைவிட, ஆணுக்கான குறைபாட்டை தீர்ப்பதே அரிதாகவும் உள்ளது.


பெண்களைப் பொறுத்தவரை மாதவிடாய் ஒழுங்கின்மை, உடல் பருமன், ஹார்மோன் குறைபாடு, நீரிழிவு நோய், தரமில்லாத முதிர்ந்த கருமுட்டை, சுரப்பி கோளாறுகள் மாதிரியான காரணங்களால் கருத்தரிக்காமல் போகிறது.


 ஏற்கெனவே ஏதாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதன் காரணமாகவும் கருத்தரிக்காமல் போக வாய்ப்பு உண்டு. இந்தக் குறைகளை ஆலோசனைகளாலும் மருந்துகளாலும் சரிசெய்யலாம். இறுதியாக, லேப்ராஸ்கோபி பரிசோதனையில் தொப்புளுக்கு அருகில் சிறு துளையிட்டு, டியூப் செலுத்தி, நீர்க்கட்டி, கருக்குழாய் அடைப்பு உள்ளிட்டவற்றை அறிந்து சிகிச்சை மேற்கொள்ளப்படும். ஆண்களைப் பொறுத்தவரை விந்தணு குறைபாடு, விறைப்புத்தன்மை குறைபாடு, தரமில்லாத, வீரியமில்லாத விந்தணுக்கள் ஆகிய காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.


இத்தகைய குறைகளையுடைய பெரும்பாலான தம்பதிகளுக்கு முறையான ஆலோசனைகள் கிடைத்தாலே, எந்தவிதமான மேல் சிகிச்சைக்கும் அவசியமின்றி குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்ற டாக்டர், ஒரு தம்பதி தங்களுக்கு குழந்தைஇல்லை என்பதற்காக எப்போது மருத்துவமனையை அணுக வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிட்டார்.


முதலில் ஆலோசனையே போதும்!


”திருமணமாகி குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆன கணவன், மனைவி இருவரும் சரியான தாம்பத்ய உறவில் இருந்தும் கருத்தரிக்க வில்லை என்றால், 30 வயதைக் கடந்த பின்னும் கருத்தரிக்கவில்லை என்றால், மருத்துவ ஆலோசனைக்குச் செல்லலாம். உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட சிக்கல் உள்ளவர்கள், ஒரு வருடம் வரை தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனைக்குச் செல்லலாம். கவனிக்க, ‘மருத்துவ ஆலோசனைக்குச் செல்லலாம்’ என்றுதான் சொன்னேனே தவிர, எடுத்தவுடனேயே கருத்தரிப்பு மையங்களுக்கு அல்ல.


முதலில் உங்களுக்கு நன்கு பரிச்சயமான, நம்பகத்தன்மையுள்ள மருத்துவரை அல்லது உங்கள் குடும்பநல மருத்துவரை அணுகுங்கள். பெரும்பாலும் அது தீர்க்கக்கூடிய பிரச்னையாகவே இருக்கும். ஒருவேளை அந்த மருத்துவர், இயற்கையான குழந்தைப்பேறுக்கான வாய்ப்புகள் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கூறினால், அவரின் வழிகாட்டுதலோடு கருத் தரிப்பு மையங்களுக்குச் செல்லலாம். அதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட மையங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மை பற்றி நன்கு விசாரித்துக்கொள்வது நல்லது.


மருத்துவர்களை மாற்றாதீர்கள்..!


குழந்தையின்மைக்காக ஆறு மாத காலம் வரை குறிப்பிட்ட மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவிட்டு, காத்திருக்கப் பொறுமையில்லாமலோ, விளம்பரத்தைப் பார்த்தோ வேறொரு மருத்துவமனைக்குத் தாவுவது தவறு. ஒரு மருத்துவர், தன்னிடம் வருபவரின் உடல் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டு சிகிச்சை அளிக்க, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தேவைப்படும். அதற்குள் அடுத்த மருத்துவமனையை அணுகி, மீண்டும் முதலில் இருந்து சிகிச்சையை ஆரம்பித்தால், அது உடல் நலத்தைதான் சீரழிக்கும்.
இன்னொரு பக்கம், பல மருத்துவமனைகள் விந்தணு குறைபாடு, கருக்குழாய் அடைப்பு என தம்பதிகளின் குறைகளையோ,


அதற்கு தாங்கள் அளிக்கும் சிகிச்சைகளையோ வரைபடம் மூலம் வரைந்து, விரிவான விளக்கங்களை சம்பந்தப்பட்ட தம்பதிகளுக்குக் கொடுப்பதில்லை. பல தம்பதிகளும் கண்கட்டி வித்தையாக, தங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விழிப்பு உணர்வு இல்லாமல்தான் அதைத் தொடர்கிறார்கள். ஒருகட்டத்தில், அந்த மருத்துவமனையின் வெற்று வைத்தியத்தை உணர்ந்து, வேறு மருத்துவமனைக்கு மாறும்போது, அதுவரை தாங்கள் பெற்ற சிகிச்சைக்கான விரிவான அறிக்கையை சம்பந்தப்பட்ட மருத்துவமனையிடம் கேட்டுப் பெறுவதுமில்லை. மருத்துவ அறிக்கையை டிமாண்ட் செய்து பெறுவது அவசியம்” என்று வலியுறுத்திய மருத்துவர் பிரியதர்ஷினி, தொடர்ந்தார்…


புற்றுநோயை உண்டாக்கும் ஹார்மோன் ஊசி!


”பெண்ணின் கருமுட்டை உற்பத்தியைத் தூண்டுகிறேன் என்று அளவுக்கதிகமான ஹார்மோன் ஊசிகள் போடுவதும், மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும்… சினைப்பை புற்றுநோயை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, முடிந்தவரை இதையெல்லாம் தவிர்ப்பதுதான் நல்லது.

‘குழந்தை இல்லை என்பது ஒரு குறையே இல்லை’ என்கிற மனநிலைக்கு வருவதுதான்… சம்பந்தபட்ட பெண்ணின் உடல்நிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை சிந்தித்து உணரவேண்டும். சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றிருக்கும் தம்பதியருக்கும், இப்போது பரவலாக எழும் விந்தணு மாறுதல் பற்றிய விழிப்பு உணர்வு தேவை. அதாவது டெஸ்ட் டியூப் முறையில் கருத்தரித்தவர்கள்,


அந்தக் குழந்தை சம்பந்தப்பட்ட தம்பதியின் வாரிசுதானா என்பதை ‘டி.என்.ஏ’ (DNA) பரிசோதனை மூலம் தெரிந்துகொள்வது, தேவையற்ற சந்தேகம் எழுவதை ஆரம்பத்திலேயே தவிர்க்கும்” என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மருத்துவர் பிரியதர்ஷினி.


லட்சக்கணக்கில் பணம் கரைகிறது!


சென்னை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் சாதனாவிடம் பேசியபோது, ”கருத்தரிப்பு மையங்கள் என்பது இன்று பெரும்பாலும் காசு கொட்டும் தொழில் என்றாகிவிட்டது. குழந்தைப் பேறுக்காக, ‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல டாக்டர்…’ என்று வந்து நிற்கும் தம்பதிகளின் பலவீனத்தையே பணமாக்குகிறார்கள் பலர். உதாரணமாக, தம்பதிகளில் ஆணின் விந்தணு தரமாக இருந்து,


அதை பெண்ணின் கருப்பையில் செலுத்த முடியாதபட்சத்தில் ஐ.யூ.ஐ எனும் (Intra Uterine Insemination) சிகிச்சை முறைப்படி ஆணின் நகரக்கூடிய தரமான விந்தணுவை எடுத்து, அதை சுத்தப்படுத்தி, பெண்ணின் கருப்பைக்குள் செலுத்துவார்கள். இதற்கு ஆகும் செலவு 4 முதல் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஆனால், இதற்கு லட்சக்கணக்கில் கட்டணம் கறக்கிறார்கள் பல மருத்துவமனைகளில். இதுவே ஆண், பெண் இருவரும் குழந்தை பாக்கியம் பெற முடியாதபட்சத்தில்… ஆணின் விந்தணுவையும், பெண்ணின் கருமுட்டையையும் ‘டெஸ்ட் டியூப் பேபி’


 முறையில் இணைக்கும் கரு உருவாக்கத்துக்கு ஆகும் செலவு 1.5 லட்சம் ரூபாய். இதற்கு 3 லட்சம் ப்ளஸ் வாங்குவதும் நிகழ்கிறது”  என்று கவலை பொங்கச் சொன்ன சாதனா, தொடர்ந்து பேசினார்…


சாமியாரைத் தேடாதீர்கள்!


”ஆணின் விந்தணு சரியாக உற்பத்தியாகவில்லை, உற்பத்தியாகும் விந்தணு வெளிவர பாதையில்லை, அப்படியே பாதையிருந்தும் வெளிவரும் விந்தணு தரமாகவும், நகரக்கூடிய தன்மையுடனும் இல்லை, அது கருமுட்டையைச் சேர வாய்ப்பே இல்லை என்றெல்லாம் மருத்துவப் பரிசோதனையில் உறுதியானால், அந்த ஆணால் குழந்தை பாக்கியம் பெற முடியாது. அதேபோல கருக்குழாய் பாதிப்புடனோ,


கருப்பை பாதிக்கப்பட்டோ அல்லது சுருங்கியோ, கருமுட்டை உருவாகும் சாத்தியம் இல்லாமலோ அல்லது உருவாகும் கருமுட்டை தரமற்றதாகவோ, விந்தணுவை ஏற்று கருவை உற்பத்திச் செய்யும் திறன் இல்லாமலோ இருக்கும் பெண்களாலும் குழந்தை பாக்கியம் பெற இயலாது.


இப்படிப்பட்ட குறைபாடு உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள், ‘குழந்தை பாக்கியம் பெறமுடியாது’ என்று மருத்துவர் சொல்லும்பட்சத்தில், ‘வேற டாக்டர், அந்த சாமியார்’ என்று மேலும் நேரத்தையும், பணத்தையும் வீணாக்காமல், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராக வேண்டும். அதாவது, டெஸ்ட் டியூப் பேபி, வாடகைத் தாய் முறை, கருமுட்டை மற்றும் விந்தணு தானம் போன்றவற்றில் குழந்தை பாக்கியம் பெற முயற்சிக்கலாம்” என்று சொன்ன டாக்டர், இயல்பாகவே கருத்தரிக்க வாய்ப்புள்ள நாட்கள் பற்றி, டிப்ஸும் தந்தார் (கீழே காணலாம்).


செயற்கை கருத்தரிப்பு மையங்களின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட பெண்களின் அழுகுரல்கள், வாடகைத்தாய், மூலிகைக் குழந்தைகள், சித்த மருத்துவத்தின் மூலம் தீர்வு, குழந்தையின்மை காரணமாக எதிர்கொள்ளும் சமூகத் தாக்குதலுக்கான எதிர்தாக்குதல், மனநல ஆலோசனை… அனைத்தையும்

இயற்கையாக கருத்தரிக்க டாக்டர் சாதனா சொல்லும் டிப்ஸ்!


”கருமுட்டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம், உயிரணுவின் ஆயுட்காலம் 48 – 72 மணி நேரம். இந்த நேரத்தில் இரண்டும் கலந்தால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உண்டு. கர்ப்பம் தரிக்க, காலண்டர் முறை, வெப்ப முறை, சளிச் சுரப்புமுறை ஆகிய மூன்றையும் பின்பற்றலாம்.


காலண்டர் முறையில், 28 நாட்கள் சீரான மாதவிலக்கு சுழற்சி உள்ளவர்கள், மாதவிலக்கான நாளில் இருந்து சுமார் 14 முதல் 16-ம் நாளுக்குள் கருமுட்டை வெளியாகும்போது உறவுகொண்டால் கருத்தரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப முறையில், உடலின் வெப்ப நிலையை தெர்மாமீட்டர் கொண்டு தொடர்ந்து கவனித்து வந்து, உடல் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் நாளில் கருமுட்டை வெளியாவதை யூகித்து.உறவு கொள்ளலாம்.


கருமுட்டை வெளியாகும் நாளில் உயிரணு நீந்திச் செல்ல ஏதுவாக கருப்பை வாயைச் சுற்றி சளிச்சுரப்பு உருவாவதை கவனித்தும் உறவு கொள்ளலாம்.”

0 comments:

Post a Comment

காப்பகம்

என்னைப் பற்றி..

பிரபலமான இடுகைகள்