Thursday, 20 March 2014



இன்றளவில், நம்மிடம் இருந்து தொலைந்துபோன ஒரு விளையாட்டு மற்றும் நாம் செய்ய மறந்த ஓர் உடற்பயிற்சி. அதுதான் இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்பாத 'ஸ்கிப்பிங்’ என்னும் கயறு பயிற்சி.

இரண்டு கைகளிலும் கயற்றைப் பிடித்துக் கொண்டு தாண்டித் தாண்டிக் குதித்த காலம்மலையேறிப்போய், ஜிம்மில் ஓடாத எந்திரத்தின் மீது ஒரே இடத்தில் நின்றபடி ஓடிக்கொண்டிருக்கிறோம். நம்மில் பலர் மறந்துபோன விளையாட்டாக இருந்தாலும்கூட, அதன் நன்மைகள் நம்மை மலைக்க வைப்பதாக இருக்கும் என்கிறார்,


 திருச்சியில் ஃபிட்னெஸ் ஹெவனைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் பிரவீன். 'ஜாகிங், ரன்னிங், சைக்கிளிங்கைவிட அற்புதமான விளையாட்டு ஸ்கிப்பிங்.  விளையாட்டு மட்டுமல்ல; சிறந்த உடற்பயிற்சியும்கூட. அந்தக் காலத்தில் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகச் செய்ததை, இன்றைக்கு உடலுக்கு ஆரோக்கியமானது என்று தெரிந்தும்கூட பலரும் செய்யத் தயங்குகின்றனர். ஸ்கிப்பிங் விளையாடுவதற்கான ஆர்வமும் குறைந்துகொண்டே போகிறது.


ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்தால், 1,300 கலோரிகள் வரை எரிக்க முடியும். ஸ்கிப்பிங் செய்வதால், நம் உடலில் உள்ள தசை, எலும்புப் பகுதிகள், கை கால்கள் என முழு உடலுமே வேலை செய்கிறது. இதனால், நம் உடலில் உள்ள ரத்த நாளங்களின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்க உதவுகிறது. நம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தத்தைக் கொண்டுபோகும் ஒரு செயலாக ஸ்கிப்பிங் பயன்படுகிறது.

ஸ்கிப்பிங் பயிற்சியின்போது நாம் குதிப்பதால், இடுப்புப் பகுதி வலுவடைகிறது. தொப்பை மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைகிறது. உடலின் வளைந்துகொடுக்கும் தன்மையும் அதிகரிக்கிறது. இதயத்துக்கு மிகவும் ஏற்ற பயிற்சி. ஸ்கிப்பிங் செய்யும்போது, 70 சதவிகித உடலின் கீழ்ப் பகுதிகளும், 30 சதவிகிதம் இடுப்புக்கு மேல் உள்ள பகுதிகளும் வேலை செய்கின்றன. கால், குதிகால் மற்றும் கணுக்கால் பகுதிகள் வலுவடைகின்றன.


தோப்புக்கரணம் மற்றும் ஸ்கிப்பிங் செய்யும்போது மட்டும்தான் இரண்டு கைளும், கால்களும் ஒரே நேரத்தில் வேலை செய்கின்றன. இதனால், உடல் மட்டுமல்லாமல் மூளையிலும்கூட உடற்பயிற்சியின் தாக்கம் ஏற்பட்டு, ஞாபக சக்தி அதிகரிக்கும்.
ஸ்கிப்பிங் பண்ணும்போது ரெண்டு கையையும் சுழற்றுவதால்,  கைகளில் உள்ள தசைப்பகுதிகள், மணிக்கட்டு போன்றவை வலிமை பெறும். ஜாகிங், உடற்பயிற்சி செய்யும்போது கழுத்துவலி, மூட்டுவலி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால், ஸ்கிப்பிங் செய்யும்போது இதுபோன்ற வலிகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.


நடைப்பயிற்சியைப் போன்று இதற்கும் பெரிய செலவு கிடையாது. ஒரு சின்னக் கயறு இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம்' என்கிறார் பிரவீன்.

 ஸ்கிப்பிங் பண்ணுங்க!
 10 நிமிடம் ஸ்கிப்பிங் செய்வது, 30 நிமிடம் ஜாகிங் செய்வதற்குச் சமம்.

 ஒவ்வொரு நாளும் தவறாமல் 45 நிமிடம் ஸ்கிப்பிங் செய்தால், உடலை ஃபிட்-ஆக வைத்துக்கொள்ள முடியும்.

 தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்ததும் 30 விநாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.
 ஜாகிங்கைவிட ஸ்கிப்பிங்கில் அதிகப்படியான கொழுப்பு எரிக்கப்படுகிறது.

 குழந்தைகள் அனைவரும் தவறாமல் வீட்டிலேயே செய்ய வேண்டிய ஓர் எளிமையான பயிற்சி. குழந்தைகள் நன்கு உயரமாக வளரவும் இந்தப் பயிற்சி உதவுகிறது.

 எப்போது செய்யவேண்டும்?
 இதற்கென குறிப்பிட்ட நேரம் தேவையில்லை. எப்போது  வேண்டுமானாலும் செய்யலாம். காலையில் செய்வதால், சுத்தமான காற்றும் இயற்கையான சூழலும் டென்ஷன் இல்லாத அமைதியும் உடலுக்கு இன்னும் ஆரோக்கியத்தைத் தரும்.

 யாரெல்லாம் செய்யக் கூடாது?

 பெரியவர்கள், மூட்டு வலி மற்றும் முழங்கால் பிரச்னை உள்ளவர்கள், கயறைத் தாண்டிக் குதிக்க முடியாது என்பதால், அவர்கள் இதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
 கர்ப்பிணிகள் செய்யவே கூடாது.

 வயதான பெண்கள் மற்றும் தொப்பையுள்ள பெண்கள் ஸ்கிப்பிங் செய்யும்போது கவனம் தேவை.

 பெண்கள் தாண்டிக் குதிக்கும்போது, கர்ப்பப்பை கீழே இறங்குவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த வாய்ப்பு மிகமிகக் குறைவாகவே இருந்தாலும்கூட மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.

 எதைச் சாப்பிடலாம்? எதைத் தவிர்க்கலாம்?


 ஸ்கிப்பிங் விளையாடும்போது, வெறும் வயிற்றுடன் இல்லாமல் ஏதாவது சாப்பிட்ட பிறகு செய்ய வேண்டும்.

 வயிறு நிறையச் சாப்பிடக் கூடாது. சாப்பிட்ட உடனே ஸ்கிப்பிங் செய்யக் கூடாது.

 குளுகோஸ் அதிகம் உள்ள வாழைப்பழம், மாவுச்சத்து குறைவாக உள்ள கோதுமை பிரெட் இதில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம்.
 டாக்டரின் ஆலோசனைப்படி கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு உள்ள உணவுப் பொருள்களை சரிவிகித்தில் சாப்பிடலாம்.

0 comments:

Post a Comment

காப்பகம்

என்னைப் பற்றி..

பிரபலமான இடுகைகள்